Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை
சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் தொல்.
திருமாவளவன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் அப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
திருமாவளவன் வருகைக்கு முன்பாக, பெரியகுளம் சாலையில் திரண்டிருந்த அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக குத்தாட்டம் போட்டனர்.
இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில்
நின்றன.
அப்போது அவசர நோயாளி ஒருவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டது. சைரன் ஒலியெழுப்பியும் தொண்டர்கள் வழிவிடாமல் தொடர்ந்து
நடனமாடியதால், ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் நகர முடியாமல் தவித்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் திருமாவளவன் உரையாற்றிக்
கொண்டிருந்தபோது, சில இளைஞர்கள் உற்சாக மிகுதியால் அவரது வாகனத்தின் மீது ஏறி
நின்றனர்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அருகில் நின்று இடையூறு விளைவித்ததால்
திருமாவளவன் கடும் கோபமடைந்தார்.
தன்னுடைய பேச்சைத் தடுத்த அந்த இளைஞர்களை, திருமாவளவன் கைகளால் அடித்தார். இறங்குங்க கீழே என்று ஆவேசமாகக் கூறிய நிலையிலும் அவர்கள் வாகனத்திலிருந்து
கீழே இறங்காமல் செல்பி எடுப்பதிலேயே மும்புறமாக ஈடுபட்டனர்.
கட்சித் தலைவரே பொதுமேடையில் இளைஞர்களை அடித்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவங்களின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி
வைரலாகி வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam