திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதி கடல் அரிப்பு தடுப்புப் பணி தொடர்பான வழக்கு - மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, 09 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 09 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க 30 கோடி ரூபாய் மதிப்பில் கடல் அரிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 15 கோடி ரூபாயை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிதியிலிருந்தும், 15 கோடி ரூபாயை மீன்வளத்துறை நிதியிலிருந்தும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த கட்டுமானத்திற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அனுமதி கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் கட்டுமான பொருட்கள் அப்பகுதிக்கு கொண்டு சொல்லப்பட்டு வருகின்றன.

கடல் அரிப்பை தடுக்கும் கட்டுமான பணிகளுக்கு கோவில் நிதியிலிருந்து 15 கோடி ரூபாயை ஒதுக்கியது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே அந்த அனுமதியை ரத்து செய்வதோடு, அனுமதி பெற்ற பிறகு கட்டுமான பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள், இந்த பணிகளுக்கு எதற்காக கோவிலின் நிதி பயன்படுத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பினர்.

கோவில் நிர்வாகம் தரப்பில், பக்தர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அரிப்பு தடுக்கப்படுகையில் கோவிலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். பக்தர்களின் நலனுக்கென கோவிலின் நிதியை பயன்படுத்த விதிகள் அனுமதிக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், அனுமதி கிடைத்த பின்னரே பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam