Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 மே (ஹி.ச.)
தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாட்டும் இணைந்த முக்கியமான திருநாள்களில் ஒன்றாக சித்திரை முழுநிலவு நாள் விளங்குகிறது.
உறவுகள் ஒன்று கூடும் இந்த நாளில், உழைப்பின் பயனை மகிழ்ச்சியாக கொண்டாடும் மரபை நினைவூட்டும் வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழர்களின் வாழ்வில் கொண்டாட்டங்கள் நிறைந்ததுடன், பாட்டாளி மக்களை ஒன்றுகூடச் செய்யும் சிறப்புமிக்க நாளாக சித்திரை முழுநிலவு கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அனைவரும் உறவுகளுடன் கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் கூடிச் சந்தித்து மகிழ்வது நமது பண்பாடு.
அந்த மரபை காக்கும் வகையில் அனைவரும் ஒன்று கூடி கொண்டாட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், கடந்த ஆண்டு சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை நினைவுகூர்ந்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதுபோன்ற ஒன்று கூடல்கள் மீண்டும் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சித்திரை முழுநிலவு நாளின் வரலாற்று சிறப்புகளை எடுத்துக்காட்டிய அவர், காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற இந்திர விழாவும், மாமல்லபுரத்தில் பல்லவர்களால் கொண்டாடப்பட்ட விழாக்களும் இந்த நாளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக குறிப்பிட்டார்.
நாட்டில் பசி, பிணி, பகை நீங்கி, நிலம் செழிக்க மழை பெய்ய வேண்டி இந்திர விழாக்கள் நடத்தப்பட்டதாகவும், அதே நோக்கத்துடன் தான் இன்றும் சித்திரை முழுநிலவு நாளை கொண்டாடுகிறோம் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு என்ற நமது நிலமும், நமது குலமும் தழைக்க ஆண்டு முழுவதும் உழைத்து, அதன் பயனை அறுவடை செய்து சித்திரை முழுநிலவு நாளில் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என கூறி, அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ