Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி ,01 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச கல்வித்துறையில் அமைச்சர் நாரா லோகேஷ் புதிய மாற்றங்களுக்கு தொடக்கமிட்டுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களின் திறமையை முன்னிறுத்தி, அரசியல் விளம்பரங்களை தவிர்க்கும் வகையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் விவரங்களுடன் முன்னணி நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வழக்கமாக அரசு விளம்பரங்களில் முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெறும் நிலையில், இந்த விளம்பரங்களில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.
அதற்கு பதிலாக, சாதனை படைத்த மாணவர்களின் புகைப்படங்கள், அவர்கள் படித்த அரசு பள்ளிகளின் விவரங்கள் மட்டுமே முக்கியமாக வெளியிடப்பட்டுள்ளன.
“அரசுப் பள்ளிகள் பெருமையுடன் நிற்கின்றன” என்ற வாசகத்துடன் மாணவர்களின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என அமைச்சர் லோகேஷ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதன்படி, அரசுத் திட்டங்களுக்கு மகான்களின் பெயர்கள் சூட்டும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டத்திற்கு “டொக்கா சீதம்மா மதிய உணவு திட்டம்” என்றும், மாணவர்களுக்கு வழிகாட்டும் திட்டத்திற்கு “டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் மாணவர் நண்பர்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், உடைகள் மற்றும் பிற பொருட்களில் முதல்-மந்திரி, அமைச்சர்களின் புகைப்படங்கள் அல்லது ஆளும் கட்சியின் நிறங்கள் இடம்பெறக்கூடாது என அமைச்சர் லோகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் சிறந்த கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார்ப்பரேட் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக இதை கல்வித்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA