Enter your Email Address to subscribe to our newsletters

நெய்வேலி, 01 மே (ஹி.ச.)
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயர் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் காலை சுவாமி உள்புறப்பாடு, மாலையில் இந்திர, சந்திர பிரபை, அனுமன், சேஷ, பெரிகருட, யானை மற்றும் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
கடந்த 29-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் திருபல்லக்கு திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சித்திரை பௌர்ணமி நாளான இன்று காலை சுமார் 6 மணி அளவில் நடைபெற்றது.
இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேதராய் உற்சவர் வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.
பின்னர், கோயில் பட்டாச்சாரியார் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோர் வேத பாராயணங்கள் முழங்கி தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனர்.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை கோவிந்தா...என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
நாதஸ்வரம் தவில் மங்கள இசை, சிவ வாத்தியங்கள், செண்டை மேளம் வாத்தியங்கள் முழங்க தேரானது மாட வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.
தேர் சென்ற வழியெங்கும் நீர்மோர், குடிநீர் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர் மன்றத் தலைவர் க.ராஜேந்திரன், தொழிலதிபர் எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், வர்த்தக சங்க நிர்வாகிகள் டி.சண்முகம், வீரப்பன், மோகன கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாக்புப் பணியில் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை அகற்றி தேரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
Hindusthan Samachar / vidya.b