Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 01 மே (H.S.)
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல், பயறு வகைகள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளன. நிலவி வரும் கடும் வெப்ப நிலையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பின்வரும் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்:
1. மாற்றுப் பயிர் சாகுபடி
நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில், அதிக நீர் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, குறைவான நீர் தேவையுள்ள சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அல்லது உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை போன்ற பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். இது மண்வளத்தை அதிகரிப்பதோடு பூச்சித் தாக்குதலையும் குறைக்கும்.
2. நீர் மேலாண்மை
வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே பயிருக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விவசாயிகள் வயல்வெளிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது மட்டுமே உரம் மற்றும் பூச்சி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துவது நீர் விரயத்தைத் தடுக்கும்.
3. ஈரப்பதம் காக்க மூடாக்கு இடுதல்
மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைத் தடுக்க, காய்ந்த இலைகள், தென்னை நார்க்கழிவு, மரத்தூள் அல்லது பாலித்தீன் தாள்களைக் கொண்டு மண்ணின் மேற்பரப்பை மூடி ‘மூடாக்கு’ இடலாம். இது மண்ணைக் குளிர்ச்சியாக வைத்து நீர் ஆவியாவதைத் தடுக்கும்.
4. நிழல்வலை அமைத்தல்
நாற்றங்கால் மற்றும் காய்கறித் தோட்டங்களில் பச்சை அல்லது வெள்ளை நிற நிழல்வலைகளை அமைப்பதன் மூலம் வெப்ப அழுத்தத்தைக் குறைக்கலாம். இது பயிர்கள் சீராக வளர உதவுவதுடன் பூச்சித் தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கும்.
5. வறட்சியைத் தாங்க நுண்ணுயிர் தெளிப்பு
வறட்சியால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு பி.பி.எப்.எம். (PPFM) திரவ நுண்ணுயிர் உரத்தைத் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 200 மி.லி. பி.பி.எப்.எம்-ஐ 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும். மேலும், பொட்டாசியம் குளோரைடு (KCL) மற்றும் கடல்பாசிச் சத்து (Seaweed Extract) ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
6. கோடை உழவு
பருவமழைக்கு முன்னதாகவே கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்த முடியும்.
இது மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்தும். மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி, விவசாயிகள் தங்களது பயிர்களைக் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாத்து அதிக மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b