நாடு முழுவதும் 100% FASTag கட்டாயம் - நேரடி பணப்பரிவத்தனை நிறுத்தம்
சென்னை, 01 மே (ஹி.ச) நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலில் இன்று முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இனி அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நேரடி பணப்பரிவர்த்தனை முற்றிலும் நிறுத்தப்பட்டு, 100% FASTag கட்டணம் செலுத்த
H


சென்னை, 01 மே (ஹி.ச)

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலில் இன்று முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

இனி அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நேரடி பணப்பரிவர்த்தனை முற்றிலும் நிறுத்தப்பட்டு, 100% FASTag கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி அமலுக்கு வந்த முதல் நாளிலேயே பல இடங்களில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருப்பாச்சேத்தி மற்றும் சத்திரக்குடி சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்க ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

FASTag இல்லாமல் வந்த வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சில இடங்களில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், FASTag வசதி இல்லாத சில அரசுப் பேருந்துகளும் சுங்கச் சாவடிகளில் காத்திருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் தரப்பில், “FASTag கட்டாயம் குறித்து ஏற்கனவே பலமுறை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அனைவரும் FASTag பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் மூலம் சுங்கச் சாவடிகளில் நெரிசலை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ