Enter your Email Address to subscribe to our newsletters

ஆமதாபாத், 01 மே (ஹி.ச.)
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணிக்கு எந்த வீரரும் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை.
இதனால் அந்த அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக வந்த கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினார்.
மறுமுனையில் சாய் சுதர்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஜோஸ் பட்லர் கில்லுடன் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தார். அரைசதத்தை நெருங்கிய நிலையில் கில் 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
தொடர்ந்து ஜோஸ் பட்லர் 19 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களிலும், ஷாருக்கான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ராகுல் தெவாட்டியா மற்றும் ஜேசன் ஹோல்டர் இணைந்து நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஹோல்டர் 12 ரன்களில் அவுட்டானாலும், இறுதியில் 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்த குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியின் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் முந்தைய ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு குஜராத் அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA