Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 01 மே (ஹி.ச.)
கரூர் மாவட்டம்,உப்பிடமங்கலம்
சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகனை இழந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், தூங்கிக் கொண்டிருந்த அவரின் கை, கால்களை கட்டி, சத்தம் போடாமல் இருக்க வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடு, ஒரு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் கீபேட் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
வழக்கமாக அதிகாலை 5 மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளை செய்வது தாயாரம்மாளின் வழக்கம்.
ஆனால் அன்று காலை அவர் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மூதாட்டியின் திருடப்பட்ட செல்போன் எண்ணை டிராக் செய்ததில் முக்கிய தடயங்கள் கிடைத்தன.
விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த வனிதா (23), அவரது கணவர் கொம்பையா (24), மற்றும் நண்பர்களான பார்த்திபன் (25), சதீஷ்குமார் (26), பாண்டீஸ்வரன் (19) ஆகியோர் இணைந்து நகைக்காக இந்தக் கொலை மற்றும் கொள்ளையை திட்டமிட்டு நடத்தியது தெரியவந்தது.
சம்பவத்தன்று இரவு, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்த அவர்கள், மூதாட்டி உறங்கிக் கொண்டிருந்தபோது கை, கால்களை கட்டி, வாயை அடைத்து நகைகள் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.
மேலும் வீட்டில் பணம் அல்லது பிற நகைகள் உள்ளனவா என்று பல இடங்களில் தேடியும் எதுவும் கிடைக்காததால் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த வழக்கில் முதலில் பாண்டீஸ்வரன் சென்னைக்கு ரயிலில் தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வனிதா மற்றும் பார்த்திபன் கரூரில் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த கொம்பையா மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை திருப்பூர் செல்லும் வழியில் போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை நடந்த பின்னரும் வனிதா அதே கிராமத்திலேயே இருந்ததாகவும், மறுநாள் மூதாட்டி உயிரிழந்த தகவல் வெளியானதும் அனைவரும் தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும், உயிரிழந்த தாயாரம்மாள் பல்வேறு உதவிகளை செய்திருந்தார் என்பது கிராம மக்களிடையே மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam