Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 மே (ஹி.ச.)
மதுரை சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்ற ஒரு பெரு விழாவாகும். அதிலும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் தங்க சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர், அதிகாலையில் பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.
காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பிறகு, பகல் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் செல்கிறார்.
அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள்.
வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு எழுந்தருள்கிறார்.
அங்கு நாளை அதிகாலை ஏகாந்த சேவையும், மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P