Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 01 மே (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு மே தின கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கலந்துகொண்டு கொடியேற்றி கட்சியினருடன் உறுதிமொழி ஏற்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளகர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
மே தின தியாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகம் முழுவதும் சாதி, மதம், இனம், மொழி கடந்து தொழிலாளர்களின் உரிமை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரன் மீது தொடுத்த யுத்தம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயு விலை உயர்ந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை ரூ.3,250 வரை உயர்ந்துள்ளதால் ஓட்டல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்படும்.
நிச்சயம் பெட்ரோல் பொருள்கள் விலையை மத்திய அரசு, அடுத்த ஒரு சில நாள்களில் கடுமையாக உயர்த்த உள்ளது.
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் காரணமாகவே இதுவரை விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசு பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைக்கவில்லை.
தொழிலதிபர்களான நண்பர்களின் லாபத்திற்காக குறைக்கவில்லை.
தற்போது சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,சுமைகள் அனைத்தையும் மக்கள் தலையில் சுமத்துவதைத்தான் மத்திய அரசு கடைபிடிக்கிறது.
தேர்தல் முடிந்தவுடன் ரயில்வேயில் சுமார் 30 ஆயிரம் பணியிடங்களை ஒழிப்பது என்ற முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது வண்மையான கண்டனத்திற்கு உரியது.
வேலையை எதிர்ப்பாத்து இருக்கும் இளைஞர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது.
உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.
ரயில்வே விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது கண்டனத்திற்கு உரியது.
பயணிகள் பாதுகாப்பைப்பற்றி கவலைப்படாமல் அரசு செயல்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு.
பொதுத்துறை நிறுவனங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளால் இட ஒதுக்கீடு என்பது இல்லாமல் போகும்.
உழைப்புச் சுரண்டல் என்பது எல்லையில்லாமல் உள்ளது. 8 மணி நேரம் என்பது 10 - 12 மணி நேரம் 16 மணி நேரம் என்று பல துறைகளில் தொழிலாளர்கள் வேலைவாங்கப்படுகிறார்கள்.
8 மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் முன்வர வேண்டும்.
தற்போது வெளியாகி உள்ள கருத்துக் கணிப்பு என்பது கருத்து திணிப்பு.
நிச்சயம் மக்கள் தீர்ப்புதான் ஏற்கக் கூடியது.
விஜய் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக்கணிப்பு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சி மீண்டும் மலரும்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் ஒரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது பெரும் துயரம்.
விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று மீண்டும் மீண்டும் பிரச்சினையாக வருகிறது.
ஆலைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
உயிரிழப்புகள் இல்லாத வகையில் தொழிலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் உயிர் பாதுகாப்புக்கு அந்தந்த நிறுவனங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். காலனி,சேரி போன்ற பெயர்களில் உள்ளதை மாற்றுவதற்கு திமுக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது,
நாங்களும் அதை வரவேற்றுள்ளோம்.
ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதியின் பெயரில் நேரடியாகக் குறிப்பிடக் கூடிய வகையில் உள்ளது,
இது அதிர்ச்சியளிக்கிறது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் அரசு ஆவணங்களில் பெயரை மாற்றுவதற்கும், அந்த ஊர் மக்களிடம் கலந்துபேசி வேறொரு பெயரை வைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b