Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 01 மே (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நடந்த சாலை விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ துவரைக்குளம் பகுதியை சேர்ந்த பால் பாண்டியின் மகன் துரைப்பாண்டி (17), தனது உறவினரான முருகன் (45) என்பவரின் காரை பெட்ரோல் நிரப்புவதற்காக நேற்று ஓட்டி சென்றார். காரில் முருகனின் மகள் கன்சிகா (4) மற்றும் உறவினர்களின் குழந்தைகளான தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஷ் (8) ஆகியோரும் பயணம் செய்தனர்.
மங்கம்மாள் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கன்சிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் துரைப்பாண்டி உட்பட நான்கு குழந்தைகள் கடுமையாக காயமடைந்தனர்.
காயமடைந்த துரைப்பாண்டி களக்காட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில், தினேஷ் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரதீப் மற்றும் லித்திஷ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டிய சிறுவன் துரைப்பாண்டி மற்றும் அவருக்கு கார் வழங்கிய முருகன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து, சிறுவர்களிடம் வாகனங்களை ஒப்படைக்கும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அவசியம் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam