வாக்கு எண்ணிக்கை மையங்களில் QR Code அடையாள அட்டை அறிமுகம்
சென்னை, 01 மே (ஹி.ச.) 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், 5.73 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 85
TN Election


சென்னை, 01 மே (ஹி.ச.)

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில், 5.73 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளான மே 4ஆம் தேதிக்காக, மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

இந்த நிலையில், அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் QR குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தவிர்க்க, தேர்தல் ஆணையம் ECINET-ல் QR code அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ‘அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் 5 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று தொடங்குகிறது.

இதிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள QR code முறையானது, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் நீட்டிக்கப்படும்.

கடந்த ஓராண்டில் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ள 30-க்கும் மேற்பட்ட முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த முக்கியமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தரப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகளும் அடங்கும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க 3 அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலரால் (RO) வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் நேரடியாகச் சரிபார்க்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில், QR குறியீடு சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.

புதிய QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கு பொருந்தும்

அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகில் ஒரு ஊடக மையம் அமைக்கப்படும். ஊடகவியலாளர்களுக்கான அனுமதி, ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த நடைமுறையை திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில், தடையற்ற மற்றும் பாதுகாப்பான அணுகல், கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக, நிர்ணயிக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியமர்த்துவதும் அடங்கும்.

வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கு, இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN