Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மே (ஹி.ச.)
நாடு முழுவதும் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களை பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வினியோகம் செய்து வருகின்றன.
வீட்டு பயன்பாட்டிற்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சிலிண்டர் விலையில் மாற்றம் அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு எண்ணெய் நிறுவனங்கள் புதிய சிலிண்டர் விலையை வெளியிட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு சிலிண்டர் ரூ.3,237க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும், தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.3,071.50க்கும், கொல்கத்தாவில் ரூ.3,202க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலங்களுக்கு ஏற்ப விலையில் மாறுபாடு காணப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் ஹோட்டல், உணவகம் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA