Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இந்நிலையில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று (மே 1ம் தேதி) ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மே 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மே 3 முதல் 6 ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம். என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P