Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 01 மே (ஹி.ச.)
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தமிழக–கேரள எல்லைப் பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி முழுநிலவு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதில் தமிழகத்தையும் கேரளாவையும் தாண்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கண்ணகி அம்மனை தரிசித்தனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,380 முதல் 5,000 அடி உயரத்தில், வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள இந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில், சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மங்களதேவி கண்ணகியுடன் தொடர்புடைய புனிதத் தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பௌர்ணமி நாளில் மட்டுமே இந்த கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவை தேனி மாவட்ட நிர்வாகமும், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.
கோவிலில் மலர் அலங்காரத்துடன், பச்சை நிற பட்டு உடுத்தி அருள்பாலித்த கண்ணகி அம்மன் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.
கூடலூர், பளியங்குடி வழியாக சுமார் 6 கிலோமீட்டர் வனப்பாதையில் நடந்தும், கேரளாவின் குமுளி–தேக்கடி வழியாக 18 கிலோமீட்டர் தூரம் ஜீப் மற்றும் நடைபயணமாகவும் பக்தர்கள் கோவிலை அடைந்தனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மங்களதேவி கண்ணகி கோட்டத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், சங்குகள் ஊதப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருமணம் ஆகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தியும் பக்திபூர்வமாக வழிபாடு செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர், உணவு, மருத்துவம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இரு மாநில மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் செய்யப்பட்டிருந்தன.
மேலும், பாதுகாப்பு பணிக்காக இரு மாநிலங்களிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
தமிழகம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கண்ணகி அம்மனை வழிபட்டு ஆன்மிக பரவசமடைந்தனர்.
ஒருகாலத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா தற்போது ஒரு நாளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் தரிசனத்திற்கான அனுமதி நேரமும் மாலை 4 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும், ஆண்டுதோறும் பக்தர்கள் திரளாக வந்து கண்ணகி அம்மனை தரிசித்து செல்வது இந்தத் திருவிழாவின் சிறப்பாகும்.
Hindusthan Samachar / GOKILA arumugam