Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 01 மே (ஹி.ச.)
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி நேற்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.07 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சென்னை திருச்சி மதுரை வேலூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நேற்று மாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து விடிய விடிய கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.
இரண்டாவது நாளாக இன்று அதிகாலை முதலே 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்கள் மற்றும் திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து கடுமையான வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.
குறிப்பாக கிரிவலம் முடித்த பக்தர்கள் நள்ளிரவு முதல் இன்று காலை வரை தங்களது சொந்த ஊருக்கு செல்ல விடிய விடிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் காத்துக் கிடந்தனர்.
போக்குவரத்து துறை சார்பில் 2669 சிறப்பு பேருந்து சென்னை திருச்சி மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் பல்வேறு சிறு நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஆனால் திண்டிவனம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சென்னை திண்டிவனம் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஏற்றவாறு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் இன்று காலை 10 மணி முதல் கிட்டத்தட்ட இரண்டு மணி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக சென்னை மற்றும் திண்டிவனம் பாண்டிச்சேரி செல்லக்கூடிய வழித்தடத்தில் போதுமான சிறப்பு பேருந்துகள் எதுவும் இல்லாததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து இல்லாமல் வெயிலிலும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
திண்டிவனம் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பேருந்துகளை வழியிலேயே மடக்கி பக்தர்கள் படியில் தொங்கியவாறும், ஆபத்தான முறையில் ஜன்னல் கம்பிகளின் மீது ஏறியும் சீட்டு பிடிப்பதற்காக முண்டியடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போதுமான பேருந்து இல்லாததால் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்த சிறப்பு பேருந்துகளை சென்னை செல்லக்கூடிய பயணிகள் மறித்து கூடுதல் பேருந்து இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக தமிழக அரசு அறிவித்தது ஆனால் அது வந்து பேச்சு அளவிலே இருந்ததாகவும் கூடுதல் பேருந்து இயக்கப்படவில்லை எனவும் ஆன்மீக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
சென்னையில் இருந்து வரக்கூடிய பேருந்துகளை வழியிலேயே மடக்கி பக்தர்கள் முண்டியடித்தவாறு ஏறி தங்களை சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.
இன்று நள்ளிரவு வரை பௌர்ணமி இருப்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN