Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 01 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல, நேற்று மாலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத் தொடங்கினர்.
சித்ரா பௌர்ணமி இன்று இரவு 9.51 மணிக்கு தொடங்கி, நாளை இரவு 11.07 மணி வரை நீடிக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுடன், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.
கிரிவலம் முடித்த பக்தர்கள் இன்று காலை, விழுப்புரம் – திருவண்ணாமலை – காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையத்தில் அதிக அளவில் கூடினர்.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதுடன், கூடுதலாக ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டன.
இருப்பினும், முன்புற பெட்டிகளில் இருக்கைகள் காலியாக இருந்த போதிலும், பயணிகள் நிற்கும் பெட்டிகளில் ஏறுவதற்காக ஒருவரை ஒருவர் முந்தியடித்து முயற்சிப்பதால் நெரிசல் மற்றும் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பௌர்ணமி தினங்களை முன்னிட்டு கூடுதலாக பணியமர்த்தப்பட்ட ரயில்வே போலீசார் உடனுக்குடன் தலையிட்டு, பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பாக ரயில்களில் ஏற்றி அனுப்பினர்.
பெரும் திரளான பக்தர்கள் வருகை தரும் இந்நாட்களில், பயணிகள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam