Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 01 மே (ஹி.ச)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட ரமேஷ் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் அலுவலகத்தை அமைத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த தேர்தல் அலுவலகத்திற்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.
இதில், அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலாகியது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக பேனர்களையும் கிழித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தவெகவினர் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து தவெக வேட்பாளர் ரமேஷ் இன்று விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது,
எனது தேர்தல் அலுவலகத்தை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தி முற்றிலும் அழித்துள்ளார்கள்.
அத்துடன் அங்கு வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தையும் கிழித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
மேலும் தேர்தல் நாளன்று ஓட்டு எண்ணும் மையத்தில் எனக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் எதிராக வன்முறை செயல்களை அரங்கேற்ற எதிர் கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உண்மையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, பாதுகாப்பாக நடைபெறுமா என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், ஓட்டு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b