Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 மே (ஹி.ச.)
புதுடெல்லியின் புது உஸ்மான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌதம் விஹார் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் தடயவியல் துறையினர் விரைந்து ஆய்வு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சாட்சியம் அளித்த ஒருவர் கூறுகையில்,
இந்த சம்பவம் கௌதம் விஹார், 4-வது தெருவில் நடந்தது. மூன்று சிறுவர்கள் ஸ்கூட்டியில் இங்கு வந்தார்கள். இருட்டான அப்பகுதியில் நின்ற அவர்கள் அச்சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
சில நொடிகளில் அவனை குத்திவிட்டு பின்புறமாக தப்பிவிட்டனர். என்ன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பதைக்கூட நாங்கள் கவனிக்கவில்லை. நடந்ததை உணர்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. என்றார்.
மற்றொரு உள்ளூர்வாசி கூறுகையில், இறந்த சிறுவனுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும். அவனைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் மிகவும் அமைதியான, அப்பாவி பையன். அக்கம்பக்கத்தில்தான் வசித்து வந்தான். வீட்டை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் அங்கிருந்து அலறல் சத்தம் கேட்டது. எங்கள் வீடு அவர்கள் வீட்டுக்கு நேர் எதிரில் உள்ளது.
வெளியே எட்டிப் பார்த்தபோது மூன்று அல்லது நான்கு பேர் அவனை கத்தியால் குத்திக் கொண்டிருந்தனர். நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டான். இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை பிடிபடவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.
அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b