Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 மே (ஹி.ச.)
தகுதியுள்ள அனைத்து வீட்டு உபயோக மின்நுகர்வோருக்கும் இருமாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையின்படி,
இருமாதத்திற்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தால் சிரமப்படும் பொதுமக்களின் நிதிச் சுமை குறையும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இருமாதத்திற்கு 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் மானியத்தை தமிழக அரசு ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செலவினத்திற்காக புதிய கணக்குத் தலைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தலைமை மின் ஆய்வாளருக்கு அதற்கான கட்டுப்பாடு மற்றும் நிர்வாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் செலவினம் “புதிய சேவை” என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், 2026-27 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சேர்த்து சட்டமன்ற ஒப்புதல் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவசரகால நிதியிலிருந்து முன்பணம் பெற்று திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் பிரிவு 108-ன் கீழ் தேவையான உறுதிமொழியும் தனியாக வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மின்சார மானியத் திட்டம் 10.05.2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam