அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு? – எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் தரப்பு அதிருப்தி
சென்னை, 10 மே (ஹி.ச.) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்தை தனியாக
Cvs


சென்னை, 10 மே (ஹி.ச.)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்தை தனியாகச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் இருவரும் முக்கிய நிர்வாகிகளுடன் தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை, அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு மற்றும் சட்டப்பேரவையில் கட்சியின் செயல்பாடு தொடர்பாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கவுள்ள சூழலில் அதிமுகவுக்குள் உருவாகியுள்ள இந்த உள்கட்சி குழப்பம் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, கட்சியின் எதிர்காலம் குறித்து அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் குறித்து சி.வி.சண்முகம் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றாக புதிய சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மூத்த நிர்வாகிகள் சமாதான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ