தமிழக சட்டப்பேரவையில் நாளை 234 எம்எல்ஏக்களும் பதவியேற்பு
சென்னை, 10 மே (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை, மே 12-ம் தேதி திங்கட்கிழமை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பதவியேற்க உள்ளனர். தற்காலிக சப
All 234 MLAs to take oath


சென்னை, 10 மே (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை, மே 12-ம் தேதி திங்கட்கிழமை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பதவியேற்க உள்ளனர்.

தற்காலிக சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உறுதிமொழி அல்லது விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள உள்ளனர்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய், வரும் மே 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான அலுவல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பின்னர், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் உரையுடன் புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும் என சட்டப்பேரவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

234 உறுப்பினர்களும் ஒரே நாளில் பதவியேற்பதால், தலைமைச் செயலக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b