Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 மே (ஹி.ச.)
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 12-ஆவது முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றுள்ளது.
புதிய அரசுக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அன்புமணி இராமதாஸ், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், போதை இல்லாத சமூகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழல், இளைஞர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, உழவர்களின் வருமான உயர்வு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் மற்றும் சமூகநீதியை பாதுகாப்பது ஆகியவை மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றும், த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றும் ஆணையில் முதலமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் நலனுக்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும், அதே நேரத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தச் செய்வதில் பொறுப்புள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ