Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழாவில், முதலில் வந்தே மாதம், தேசியகீதம், 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இந்த விவகாரம் பேசுபொருளானது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிபிஎம் தனது அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவுடன் முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் திரு ச.ஜோசப் விஜய், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசியகீதமும் பாடுவதுதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டதும், பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது.
மேலும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல.
ஆகவே, அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என அறிவித்திருப்பதும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் என்று அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN