Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று (மே 10 ஆம் தேதி) பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், விஜய்க்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விஜய் பதவியேற்றக் கையோடு, 9 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். தொடர்ந்து விழா மேடையில் உணர்ச்சிப்பொங்க பேசிய விஜய், தலைமைச் செயலகத்துக்கு சென்று அரசுப் பணிகளைத் தொடங்கினார். முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 3 ஆணைகளில் கையெழுத்திட்டார்.
அதில் முதல் ஒன்றான, இரு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதோடு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசும், மின்வாரிய அதிகாரிகளும் விளக்கம் அளித்து உள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோருக்கு இனி 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரம், இப்போது 200 யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாதாந்திர மின்சாரச் செலவில் பொதுமக்களுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்கும்.
அதே நேரத்தில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
எனவே எந்தப் பிரிவினருக்கும் வழங்கப்பட்ட சலுகை குறைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 2.23 கோடி வீட்டு மின்நுகர்வோர் நேரடியாக பயனடைவார்கள் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இந்த திட்டம் பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.1,730 கோடி செலவாகும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி விஜய் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்து உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்த மின்சார சலுகை திட்டத்தை ஆட்சியின் முதல் நாளிலேயே செயல்படுத்தும் நடவடிக்கை, புதிய அரசின் முன்னுரிமையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN