Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச)
தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10 ஆம் தேதி) பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு அமைந்து உள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தன.
பொதுவாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது.
அதன் பின்னர் தேசிய கீதம் இடம்பெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது.
இதனால், தமிழ்த்தாய் வாழ்த்து வழக்கமான முக்கிய இடத்தில் இடம்பெறாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக சில அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் எழுந்து உள்ளன.
தமிழ்நாட்டின் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்படும் மரியாதை குறித்த விவாதமும் இதனைத் தொடர்ந்து தொடங்கி இருக்கிறது.
தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்து உள்ளது. அந்த வகையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றது தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்த விவகாரம் அடுத்த சில நாட்களிலும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் குடியரசுத் தலைவர், ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் வந்தே மாதரம் பாடல் தான் ஒலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் தேசிய கீதம், அதற்கு அடுத்ததாகவே அரசின் மொழிப் பாடல் பாடப்படும் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN