1 வாக்கு வித்தியாச தோல்வி- தவறாக அனுப்பப்பட்ட தபால் வாக்கு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, 10 மே (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் போது பெரியகருப்பன் தரப்பில
உயர்நீதிமன்றம்


சென்னை, 10 மே (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கின் போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

திருப்பத்தூர் என்ற பெயரில் 185 மற்றும் 50 என்ற எண்களுடன் இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தபால் வாக்குச்சீட்டு தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மற்றொரு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த வாக்குச்சீட்டு அங்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வாக்கு சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த வாக்கு எண்ணப்பட்டிருந்தால் இறுதி முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, திருப்பத்தூர் என்ற பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கு தொடர்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது பெரியகருப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகாரை ஏன் பரிசீலிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam