Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 மே (ஹி.ச.)
முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பதவியேற்றதும் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை வரவேற்றுள்ள அவர்,
“அரசிடம் பணம் இல்லை” என்ற பேச்சை ஆரம்பத்திலேயே முன்வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவிட், வெள்ளப் பேரழிவு உள்ளிட்ட பல்வேறு சவால்களையும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளையும் சமாளித்தபடியே கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு பல மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ரூ.10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு” என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், தமிழ்நாட்டின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தற்போது நிதிநிலையை காரணமாகக் கூறி மக்களை திசைதிருப்ப வேண்டாம் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
“நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள விஜய், அரசு நிர்வாகத்தின் நுணுக்கங்களை விரைவில் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையையும் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, விஜய் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும் என்றும் மீண்டும் தனது வாழ்த்துகளை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ