Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்துள்ள இலவச மின்சார திட்டம் குறித்து திமுக கடும் விமர்சனம் எழுப்பியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதுக்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் தற்போது இரண்டு மாதங்களுக்கு சேர்த்து 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அதுவும் 500 யூனிட்டிற்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 500 யூனிட்டை கடந்தால் 200 யூனிட் இலவச மின்சார சலுகையும் கிடையாது என்பது மிகப்பெரிய மோசடி. இதற்கு முன்பு எந்த நிபந்தனையும் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இந்த புதிய திட்டத்தால் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது என்றும் திமுக விமர்சித்துள்ளது.
இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது என்றும், மாறாக கூடுதல் மின்கட்டணச் சுமை ஏற்படும் என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பு மறைமுகமாக மின்கட்டண உயர்வை முன்னறிவிப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது என்றும் திமுக தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P