Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 10 மே (ஹி.ச.)
சென்னை தாம்பரம் மற்றும் பூந்தமல்லி பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த வியாழக்கிழமை இரண்டு சொகுசு பேருந்துகளில் சென்றிருந்தனர்.
போட்டிகள் முடிந்ததையடுத்து நேற்று இரவு அவர்கள் சென்னை திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பேருந்தில் 31 மாணவர்கள் பயணம் செய்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (31) என்பவர் பேருந்தை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மணதாங்கல் – கிருஷ்ணாபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் மோதி எதிர்புற சாலையோரம் உள்ள சுமார் 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 19 வயது மாணவி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மற்ற மாணவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தகவலறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவர்களை மீட்டனர்.
பின்னர் மாற்று பேருந்து மூலம் அவர்கள் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam