Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
அன்னையர் தினத்தை முன்னிட்டு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில்,
உலகின் ஆதியும், அந்தமும் அன்னையரே, அவர்களின் அன்புக்கும், தியாகத்திற்கும் எல்லையே இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘அம்மா’ என்ற மூன்றெழுத்திற்குள் ஒட்டுமொத்த உலகமும் அடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகைக் கூட அளக்க முடியும். ஆனால், அன்னையின் அன்பு, தியாகம், கருணை, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, அயராத உழைப்பு மற்றும் ஊக்கமளிப்பை எந்த தொழில்நுட்பத்தாலும் அளவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மனிதர்கள் வாழ்வில் வாங்கிய அனைத்து கடன்களையும் அடைத்துவிட முடியும். ஆனால், அன்னைக்கான நன்றிக்கடனை ஒருபோதும் அடைக்க முடியாது என்றும், அந்த நன்றிக்கடனை அடைப்பதற்கான முயற்சியே மனித வாழ்க்கை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்த முயற்சியில் முழுமையாக வெற்றி பெற முடியாது. ஆகவே, நம்மால் இயன்ற வகையில் அன்னையர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.
ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு நன்றிக்கடன் செலுத்திக் கொண்டே இருப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ