ராமேஸ்வரம் தீவில் விடிய விடிய கனமழை தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்- வாகன ஓட்டிகள் அவதி
ராமேஸ்வரம், 10 மே (ஹி.ச.) மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று இரவு முதல
மழை


ராமேஸ்வரம், 10 மே (ஹி.ச.)

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.

குறிப்பாக ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் கடும் சிரமத்துடன் மெதுவாக நகர்ந்தன.

சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், தேங்கிய மழைநீரில் குளத்திற்குள் செல்வது போன்ற நிலையில் ஊர்ந்து சென்ற காட்சி காணப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam