Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த நியமனம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
கருப்பையா, கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.
அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிமுகவிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கருப்பையா, சோழவந்தான் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது அவருக்கு தற்காலிக சபாநாயகர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் நிரந்தர சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை, தற்காலிக சபாநாயகராக கருப்பையா செயல்பட உள்ளார்.
புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது, முதல் கூட்டத்தொடரை நடத்துவது உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து, தற்போது சட்டப்பேரவையின் முக்கிய பதவியை பெற்றிருப்பது கருப்பையாவின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ