Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் நீடித்துக் கொண்டே இருந்தது.
ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயன்று வந்தார்.
அதன்படி தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று புதிய ஆட்சி அமைக்க உள்ளது.
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட கூடுதலாக, இக்கூட்டணி மொத்தம் 120 இடங்களைப் பெற்றுள்ளது.
விசிக, ஐயூஎம்எல் ஆதரவால் தவெகவின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்வராக விஜய் பதவியேற்கிறார்.
முதல்வரின் பதவியேற்பு விழா பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அண்ணாநகர் டவர் பார்க், மெரினா கடற்கரை, கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் பேருந்து நிலையம், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் பேருந்து நிலையம், கத்திப்பாரா மேம்பாலம், செம்மொழி பூங்கா, தீவுத்திடல் பேருந்து நிலையம், நாகேஸ்வரா பார்க், மயிலாப்பூர் டேங்க் ஏரியா,
வடபழனி பேருந்து நிலையம், எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி, சோழிங்கநல்லூர், போரூர் ஜங்சன், மாதவரம் பேருந்து நிலையம், அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையம், தண்டையார்பேட்டை பஸ் டிப்போ ஏரியா, அடையாறு டிப்போ ஜங்சன் ஆகிய 20 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b