Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 10 மே (ஹி.ச)
தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுமார் 165 கிலோமீட்டர் தொலைவிற்கு அமையவுள்ள தஞ்சாவூர்-விழுப்புரம் புதிய ரயில் பாதை வழித்தடம், டெல்டா மாவட்டங்களை வட மாவட்டங்களுடன் நேரடியாக இணைக்கும் முக்கிய இணைப்பாக கருதப்படுகிறது.
இத்திட்டம் நிறைவேறினால் சென்னை-தஞ்சை இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வும், அதனைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கைக்கான ஆய்வும் நிறைவடைந்துள்ளன. ஆனால், நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் காகித அளவிலேயே நிற்கிறது என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 2028-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவை காரணமாகக் காட்டி பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகப் புகழ்பெற்ற விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கு முன்னதாக இந்த ரயில் பாதையை முழுமையாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த பாதை அமைக்கப்பட்டால் வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு ஆகிய புனிதத் தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும் பெரும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மத்திய ரயில்வே அமைச்சகம் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்தும், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தியும், 2028 மகாமக விழாவை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b