Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 10 மே (ஹி.ச)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பாளையங்கோட்டை தினசரி சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இடைவிடாத மழையால் சந்தைக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறிகள், கீரைகள் ஆகியவை நீரில் நனைந்து சேதமடைந்ததால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், சந்தைக்குள் முறையான வடிகால் வசதி இல்லாததே இந்த நிலைக்கு முக்கிய காரணம். சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கிவிடுகிறது. இன்று முழுமையாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தார்.
மேலும், தேங்கியுள்ள மழைநீரால் சந்தைக்கு வரும் பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகினர். சேறும் சகதியுமாக காணப்படும் சந்தை வளாகத்தில் நடக்க முடியாமல் பலர் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
மழைநீரை உடனடியாக வெளியேற்ற மோட்டார் பம்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நிரந்தர வடிகால் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
தொடர்ந்து வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b