Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டதை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் முதன்முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் வந்தே மாதரம் பாடப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டு மரபை மீறிய நிகழ்வாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மொழி வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், புதிய அரசு பதவியேற்பு விழா ஆளுநரின் வழிகாட்டுதலில் நடைபெற்றதால் வந்தே மாதரம் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் தொலைநோக்கு பார்வையுடன் வந்தே மாதரம் பாடலில் சில வரிகளை நீக்கியிருந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் தேசிய கீதத்துக்கு இணையாக அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த உத்தரவை ஆளுநர் மாளிகை செயல்படுத்தியிருப்பதாகவும், தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்திலேயே பாடப்படுவதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P