Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்,
தமிழக அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்பட்ட இடம் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த மரபு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைப்பதில் ஆளுநர் தாமதம் செய்ததாகவும், குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சிகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை முறியடிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் “வந்தே மாதரம்” மற்றும் நாட்டுப்பண் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் இடம்பெறுவது விடுதலைக்குப் பிறகு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“வந்தே மாதரம்” ஒரு குறிப்பிட்ட மத சார்புடைய பாடல் என்பதால் அதனை தேசிய கீதமாக ஏற்க முடியாது என்று விடுதலைப் போராட்ட காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டதாகவும், இந்த நிலையில் ஆளுநர் மாளிகை உத்தரவின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கு முதலிடம் வழங்கியது மரபு மீறல் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்றும், இனி நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதையும், நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாநில செயறக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நாளை நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இந்த மரபு பின்பற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் தற்காலிக பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P