Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை மற்றும் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநில அரசின் வருவாய் நிலை, செலவினங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் விரிவாக கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மக்கள்நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளை செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்ற உடனேயே மாநிலத்தின் நிதிநிலையை ஆய்வு செய்திருப்பது, ஆட்சியின் முன்னுரிமைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P