Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
தமிழக அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் அரசியல், பண்பாட்டு மற்றும் அரசு மரபுகளின்படி எந்த அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதே பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உயரிய நடைமுறை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அந்த மரபு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கு உரிய மரியாதை வழங்கப்படாமல், ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்மொழி பின்தள்ளப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் நடைமுறையில் இல்லாத வந்தே மாதரம் பாடலை முதலாவதாக இசைத்ததும் ஏற்க முடியாத ஒன்று என வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் கோரிக்கையல்ல; அது தமிழர் இனத்தின் அடிப்படை உணர்வும் உரிமையும் ஆகும் என்றும், மொழியை மதிக்காத ஆட்சி மக்களின் மனதை மதிக்காத ஆட்சியாகவே பார்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ்மொழி மரியாதை தொடர்பான அரசின் பாரம்பரிய நடைமுறைகள் எந்தச் சூழலிலும் மீறப்படாத வகையில் உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam