Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச)
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டமன்றக் கூட்டமும் தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டமுமான இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், கோட் சூட் அணிந்து பங்கேற்றார். தமிழக எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு எதிர் முனையில் அமர்ந்திருந்தார்.
இந்த கூட்டத்தொடரில் உரையாற்றிய தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதல்வர் விஜய்க்கு புகழாரம் சூட்டினார். அதனை தொடர்ந்து சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக முதல்வர் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என தவெக, திமுக, அதிமுக அடுத்தடுத்து 233 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த கூட்டத்தொடரின் போது எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக வந்திருந்தனர். வழக்கமாக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வருகை தரும் அதிமுக எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி வரும் வரை காத்து நின்று, அவருடன் இணைந்து செல்லும் உள் செல்வார்கள்.
இந்த நிலையில், இன்று மூத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் தனித்தனியே சட்டமன்றம் உள் சென்றுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி.வேலுமணியுடன் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 35 எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.
தேர்தல் தோல்வி காரணமாக அதிமுகவின் உட்கட்சி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இரு அணிகளாக பிரிந்து சட்டமன்றம் வந்த அதிமுக எம்.எல்.ஏக்களால் மீண்டும் அதிமுக பிளவுபடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b