Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மே (ஹி.ச.)
தமிழ்நாடு என்றும் தனித்துவமான வரலாறும், பண்பாடும் கொண்ட மண்ணாக திகழ்கிறது என்றும், “தமிழும் அறமுமே” இந்த நிலத்தின் வரலாற்றை வழிநடத்தி வந்துள்ளன என்றும் தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தலைமையிலான ஆட்சிக்கும் மக்கள் வழங்கியுள்ள ஆதரவு மிகப்பெரிய பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.
“நம் வீட்டுப் பிள்ளைகளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம்; அவர்கள் நமக்கான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கை ஒருபோதும் பொய்யாகாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எளிய மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில், 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த “சிங்கப்பெண் அதிரடிப்படை” மற்றும் இளைஞர்களை போதைப் பொருளிலிருந்து காக்க “போதைப் பொருள் தடுப்புப் படை” போன்ற திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, சட்டமன்றத்திற்குச் சென்று மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை ஏற்றுக்கொண்டதோடு, அரசின் செயல்திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கொள்கைத் தலைவர் Periyar E. V. Ramasamy நினைவிடத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று மரியாதை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கே.வீரமணி அவர்களை முதலமைச்சருடன் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், தமிழக வெற்றிக் கழக அரசு தந்தை பெரியார் காட்டிய கொள்கைப் பாதையில் எந்த சமரசமும் இன்றி பயணிக்கும் என உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
“ஆதவ் அர்ஜூனா எனும் நான்” என்று அமைச்சராகப் பதவியேற்ற தருணத்தில், அது தனிப்பட்ட குரல் அல்ல; தமிழக மக்களின் கூட்டு முழக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்வர் அண்ணன் ச. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி, அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும். அறம் ஓங்கும். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ