Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 11 மே (ஹி.ச.)
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால், குளிப்பதற்கு மிகவும் ஆபத்தான நிலை காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் மற்றும் போலீசார் அருவிப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக தடை விதித்துள்ளனர்.
குளிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் தூரத்தில் நின்று அருவியின் அழகை ரசித்து, புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
நீர்வரத்து சீராகும் வரை குளிப்பதற்கான தடை தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரின் அறிவுறுத்தல்களை மீறி ஆபத்தான முறையில் அருவியில் இறங்க வேண்டாம் எனவும், பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், அகஸ்தியர் அருவி, பாணதீர்த்தம் உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b