திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வழக்கு - தீர்ப்பை தள்ளிவைத்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 11 மே (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்ப
Periya


சென்னை, 11 மே (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்கில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுவது கற்பனையான குற்றச்சாட்டு.

தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பப்பட்டதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

இதற்கு பதிலளித்த பெரியகருப்பன் தரப்பு, தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு மாறிச் சென்றதற்கான ஆதாரம் இல்லை என கூறுவது தவறு. வாக்குகள் மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார் என்று வாதிட்டது.

மேலும்,தபால் வாக்குகள் வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால் எந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் சட்டத்தில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை.

அதே சமயம் தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பப்பட்டதையே தேர்தல் ஆணையம் முழுமையாக மறுக்கவில்லை என்றும் பெரியகருப்பன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Hindusthan Samachar / P YUVARAJ