Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மே (ஹி.ச.)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தற்போது வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானிலை மாற்றத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது எனவும், உள் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வுப்பகுதி காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் அடுத்த இரு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கனமழை எச்சரிக்கையை அடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b