களக்காடு தலையணையில் 6 நாட்களுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
நெல்லை, 11 மே (ஹி.ச) நெல்லை மாவட்டம் களக்காடு அருகே அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த தலையணையில் 6 நாட்களுக்கு பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர். கோடை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மா
Thalaiyanai


நெல்லை, 11 மே (ஹி.ச)

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த தலையணையில் 6 நாட்களுக்கு பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.

கோடை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குடும்பத்தினருடன் ஏராளமானோர் தலையணை அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் களக்காடு, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக தலையணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி கடந்த 6 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது.

தற்போது மழை குறைந்து நீர்வரத்து சீரான நிலைக்கு திரும்பியுள்ளதால், இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை முதலே ஏராளமானோர் தலையணைக்கு வருகை தந்து நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலையணையில் ஆபத்தான இடங்களுக்கு செல்லக்கூடாது, குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதால், கோடை விடுமுறையை கொண்டாட தலையணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN