Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 11 மே (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஆறுகள், அணைகள், ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீரநாராயணமங்கலம் பகுதியில் உள்ள பழைய ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையோரம் செல்லவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கடும் வெயில் குமரி மாவட்ட மக்களை வாட்டி வதைத்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மேலும் சில நாட்கள் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கீரிப்பாறை, காளிகேசம், வாளையத்து வயல், தடிக்காரன் கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகள், குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வீரநாராயணமங்கலம் பழைய ஆற்றில் வெள்ளநீர் வேகமாக பாய்ந்து வருகிறது. அதேபோல் சுசீந்திரம் பகுதியில் உள்ள சோழன் திட்டை அணைக்கட்டின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆற்றுப்பகுதிகளில் மக்கள் தேவையற்ற முறையில் செல்லாமல் இருக்கவும், வெள்ளப்பெருக்கு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் நிலைமையை கண்காணித்து வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P