Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 11 மே (ஹி.ச.)
கரூர் மாவட்டம் காந்திகிராமம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தலையணை தயாரிப்பு குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடோனில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் திடீரென புகை கிளம்புவதை கவனித்து, தீ பரவி வருவதை அறிந்ததும் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால், குடோனில் தலையணை, பஞ்சு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீ வேகமாக பரவி குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பெருமளவில் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN