Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 11 மே (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 16 வயது சிறுவன் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், மணியனூரில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவனும் இவர்களுடன் நண்பராக இருந்துள்ளார்.
மூவரும் பேஸ்புக் மூலம் பழகியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு மல்லூர் அருகே உள்ள கஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அவர்களுடன் தொடர்பில் இருந்த சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் கோகுல் அங்கு வந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த சிறுவர்களுக்கும் கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கோகுல், சிறுவர்களை ஜாதிப் பெயரை கூறி திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று சிறுவர்களும் சேர்ந்து கோகுலை கத்தியால் சரமாரியாக குத்தியதுடன், அவரது முகத்தையும் சிதைத்து கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர், கொலை செய்யப்பட்ட கோகுலின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்து மூவரும் தப்பி ஓட முயன்றுள்ளனர்.
அவர்களில் இரு சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மற்றொரு சிறுவனை தேடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லூர் போலீசார், கோகுலின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam